-த.அம்பிகாவதி-
மல்லாவி ஆதார மருத்துவமனையில் நீண்டகாலமாக நிலவும் கழிவுநீர் வாய்க்கால் பிரச்சினைக்குத் தீர்வுகாண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்காக மாங்குளத்துக்குக் கொண்டு செல்வதற்குரிய வாகன வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார்.
மல்லாவி ஆதார மருத்துவமனையின் செயற்பாடுகள் மற்றும் தேவைப்பாடுகளைக் கண்டறிவதற்காக கடந்த புதன்கிழமை ஆளுநர் அங்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது மருத்துவமனையின் சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் விடுதிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டார். அத்துடன் கழிவுநீர் வெளியேற்றப்படும் வாய்க்காலில் உள்ள குறைபாடுகள், மழை காலங்களில் அவசர சிகிச்சைப் பிரிவின் கூரையில் ஏற்படும் நீர்க்கசிவு மற்றும் தாதியர், மருத்துவ மாதுக்களுக்கான விடுதிகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பிலும் அவர் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர், மருத்துவர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இச்சந்திப்பில், மருத்துவமனையில்; உள்ளக வீதிகள் இன்மை, மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, நோயாளர் காவு வண்டியின் அவசர தேவைப்பாடு மற்றும் மருத்துவ அத்தியட்சகர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதால் ஏற்படும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மல்லாவி மருத்துவமனை ஆதார மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்ட போதிலும், அதற்கேற்ப ஆளணி அதிகரிக்கப்படவில்லை எனவும், இருக்கும் மருத்துவர்களிலேயே ஒருவரை மருத்துவ அத்தியட்சகராக நியமிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், ஆளுநரின் விசேட வேண்டுகோளுக்கு அமைவாக 13 ஆண்டுகளின் பின்னர் வடக்கு மாகாணத்தில் ஆளணி முகாமைத்துவத் திணைக்களத்தால் ஆளணி மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய விரைவில் ஆளணிகள் அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன எனவும் குறிப்பிட்டார்.
கழிவுநீர் வாய்க்கால் பிரச்சினைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஆளுநர் மத்திய அரசாங்கத்திடம் நோயாளர் காவு வண்டிகள் கோரப்பட்டுள்ளதாகவும், அவை கிடைக்கப்பெற்றதும் முன்னுரிமை அடிப்படையில் பின்தங்கிய பிரதேசங்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் ஆதார மருத்துவமனைகளின் சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் ஊடாக, இம்மருத்துவமனையின் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும் ஆளுநர் உறுதியளித்தார்.
















