இத்தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பினும் அதில் தனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை எனத் தெரிவித்த ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், இது மாகாணசபைத் தேர்தல்களைக் காலதாமதப்படுத்துவதற்கான வெறும் இழுத்தடிப்பு வேலை மாத்திரமே என விசனம் வெளியிட்டார்.
தெரிவுக்குழு நியமனம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிடார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் நான் பல்வேறு தெரிவுக்குழுக்களில் அங்கம் வகித்திருப்பதனால் இதனை நன்கறிவேன். தற்போது 3 மாத கால அவகாசத்துடன் நிறுவப்பட்டிருக்கும் தெரிவுக்குழுவின் கால அவகாசம் பின்னர் மேலும் நீடிக்கப்படும்.
எனவே, அரசாங்கம் உண்மையிலேயே மாகாணசபை முறைமையில் ஈடுபாடு கொண்டிருப்பின், தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் தனிநபர் பிரேரணையை நிறைவேற்றி, பழைய முறைமையில் தேர்தலை உடனடியாக நடாத்தவேண்டும்.
அதன் பின்னர் அடுத்த தேர்தல் வரையான காலப்பகுதியில் எல்லை நிர்ணயம் உள்ளடங்கலாக புதிய முறைமையில் தேர்தலை நடாத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். அதனைவிடுத்து, தேர்தலைக் காலதாமதப்படுத்துவதற்கு இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.


















