பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் எனும் தொனிப் பொருளில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, பேரணியாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் சென்று நிறைவடைய உள்ளது.
தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இப் போராட்டத்தில் கட்சி பேதங்கள் இன்றி, அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போராட்டம் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே தாயகச் செயலணியின் பிரதிநிதிகள் இவ்வாறு அழைப்பு விடுத்தனர்.
நாட்டில் ஏற்கனவே இருக்கிற பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்களே பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வந்திருக்கின்றனர்.
அதனால் இந்தச் சட்டத்தையே நீக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை விடுத்து வந்திருக்கின்றனர்.
அதிலும் இந்த அநுர அரசாங்கம் கூட அந்தக் கொடிய சட்டத்தை நீக்குவதாக கூறியிருந்தாலும், தற்போது அதற்கு மாற்றாக புதியதொரு சட்டத்தை கொண்டு வருகின்றனர்.
ஆகையினால் எம்மைப் பொறுத்த வரையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை பொறுத்த வரை அது புதியதோ பழையதோ எதுவுமே தேவையில்லாதது. அதனை முழுமையாக நீக்க வேண்டும் என்றே நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
ஆனாலும், அரசாங்கம் புதியதொரு சட்டத்தை கொண்டு வருவதைக் கண்டித்தும் மக்களைப் பாதிக்கின்ற அத்தகைய சட்டங்கள் வேண்டாம் என்பதை வலியுறுத்தியுமே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆகையினால் இப் போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் – என்றனர்.














