-செ.ரவிசாந்-
செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 44 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் கலட்டியில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் நிறுவனத் தலைவர் கெ.பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தைச் சேர்ந்த விஜயகுமார் சியாமளா தம்பதிகள் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும், யாழ்.மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.வரதபாஸ்கரன், யாழ். மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள இணைப்பாளர் தி.உமாசங்கர், நல்லூர் பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.தர்மினி ரஜீவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், நல்லூர் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி.சிவதர்ஷினி பாலசுப்பிரமணியம், நல்லூர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சுப்பிரமணியம் சுகுமாரன் வண்ணார்பண்ணை வடகிழக்கு கிராம அலுவலர் திருமதி.ரேணுகா நகுலன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் விரைவில் இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள நல்லூர் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.தர்மினி ரஜீவன் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவன சமூகத்தினரால் சிறப்புப் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். கைதடி நவீல்ட் பாடசாலையின் முன்னாள் அதிபர் த.சாம்சன் லூர்திஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றினர்.
குறித்த நிகழ்வில் செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் அமரர்.நடராசா ஞானசோதி நினைவாக அவரது மகளான திருமதி.விஜயகுமார் சியாமளாவின் நிதிப் பங்களிப்பில் உலர் உணவுப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.


















