யாழ். போதனா வைத்தியசாலையில் கண் சிகிச்சைகளுக்காக தென்பகுதியிலிருந்து பெருமளவானோர் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை கண் சிகிச்சைப் பிரிவுக்கு, தென்பகுதி வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் பகுதியிலிருந்து கண் சிகிச்சைகளுக்கு வருகின்ற நோயாளர்களால், ஜனாதிபதிக்கு இந்த விடயம் தொடர்பில் கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கண் வெண்திரை நீக்கத்துக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும், எனினும் யாழ்ப்பாணத்தில் இதற்கான சத்திரசிகிச்சைகள் உரியமுறையில் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண் நோயியல் விசேட நிபுணர் எஸ்.மலரவன் தலைமையிலான மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவமனை பணியாளர்கள், தங்களுக்கான சிகிச்சைகளை உரியவாறு வழங்குவதாகவும், தென்பகுதி நோயாளர்கள் கூறினர்.
அதேசமயம் தென் பகுதியில் அதிக செலவில் கண் நோய் தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்படுகின்ற போதிலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முற்றுமுழுதாக இலவச சேவைகள் வழங்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


















