-யாழ்.பல்கலையில் பொலிஸ் தீவிர விசாரணை-
-க.சபேஷன்-
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை இவ்விடயம் தொடர்பில் பல்;கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு
செய்தனர்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் வருடா வருடம் இலங்கை சுதந்திர தினத்தினை கரி நாளாக பிரகடணப்படுத்திய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்படி கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஏற்றப்பட்டிருந்த நாட்டின் தேசியக் கொடியை மாணவர்கள் சிலர் இறக்கினர். அதற்குப் பதிலாக கறுப்புக்
கொடியை ஏற்றியிருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், அச் சம்பவத்தில் பதிவான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை திரட்டி தீவிர விசாரணைகளில் இறங்கியிருந்தனர்.
இதன்படி குறிப்பிட்ட சில மாணவர்களை பொலிஸார் அடையாளப்படுத்தியும் உள்ளனர். இந்நிலையில் நேற்று யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தனர் பதிவாளர் ஆகியோரிடம் இது தொடர்பில் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றனர்.
இதன் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களிடமும் இது தொடர்பிலான வாக்குமூலங்கள் பெறப்பட்டு, அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர்.


















