-ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு-
மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது. இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் பெருமளவிலான வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. சாதாரண மக்கள் தங்களின் தேவைகளுக்குக் கூட மணலைப் பெற்றுக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும் மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ளவும் புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் வடக்கு மாகாணத்தில் தற்போது எழுந்துள்ள சவால்கள் தொடர்பில் நேரில் ஆராய்ந்து தீர்வுகாண்பதற்காக, ஆளுநரால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பை ஏற்று, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜெயசிங்க இக்கலந்துரையாடலில் விசேடமாகப் பங்கேற்றிருந்தார். இக்கலந்துரையாடலிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு புவிச்சரிதவியல் அலுவலகத்திடமிருந்து போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கவில்லை. திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மணல் எடுத்து வருவதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக அகழப்படும் மணலையே ஏற்றி வருகின்றனர். மாவட்ட செயலர்கள் தலைமையில் விசேட குழுக்களை அமைத்து, அக்குழுக்களின் ஊடாகவே இனி அனுமதிகளை வழங்கும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என ஆளுநர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.


















