-ரவிகரன் எம்.பி வலியுறுத்து-
-வி.சரவணன்-
மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் தலைமையிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வவுனியா வடக்கு பிரசேசெயலாளர் பிரிவிலுள்ள திரிவச்ச குளம் என்னும் இடத்தில் பெரும்பான்மை இனத்தவர்களால் சட்டவிரோதமாக பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டன.
இலங்கையின் சட்டத்தின்படி காடுகளை அழிப்பதெனில் உரிய அனுமதிகளைப் பெறப்படவேண்டும். ஆனால். திரிவச்சகுளம் பகுதியில் அனுமதிகள் எவையும் பெறப்படாமல் 600 ஏக்கருக்கும் மேற்பட்ட அடர்வனங்கள் அழிக்கப்பட்டன.
மகாவலி அதிகாரசபை தனது ஆளுகைக்குட்பட்ட இடம் என உரிமைகோரும் பகுதியிலேயே இவ்வாறு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மகாவலி அதிகாரசபையின் ஆதரவோடுதான் இவ்வாறு அடர்வனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய பாரிய சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கு இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த சட்டவிரோத காடழிப்புச் செயற்பாடு தொடர்பில் நான் நேரடியாகப் பார்வையிட்டதுடன், குறித்த சட்டவிரோத காடழிப்புச் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகாவலி அதிகாரசபையிடம் வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால் அங்கு சட்டவிரோதமாக காடழிப்புச் செயற்பாட்டில் ஈடுபட்ட பெரும்பான்மை இனத்தவர்களுக்கெதிராக இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
சட்டவிரோத செயற்பாட்டில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கெதிராக மிகக் கடுமையான சட்டநடவடிககை எடுக்கப்படவேண்டும். இந்தவிடயத்தில் மகாவலி அதிகாரசபை பாரிய சட்டவிரோத செயற்பாட்டிற்கு ஆதரவாகச் செயற்பட்டிருக்கின்றது. எனவே அமைச்சர் லால்காந்த இவ்வாறு சட்டவிரோத காடழிப்புச் செயற்பாட்டிற்கு ஆதரவாகச் செயற்பட்ட மகாவலி அதிகாரசபைக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த விடயத்தில் மகாவலி அதிகாரசபை மரணதண்டனைக்குரிய பாரிய குற்றச்செயலைச் செய்துள்ளது. பாரிய மரங்கள், பாரிய அளவில் அழிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு காடழிப்புச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமைக்கான ஆதாரங்களும் எம்மிடமுள்ளன.
எனவே இந்தவிடயத்தில் மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் – என்றார்.


















