-சு.பாஸ்கரன்-
உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு எமது தமிழ் பெண்கள் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தனர் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று பிற்பகல் பூநகரி சின்ன பல்லவராயன் கட்டு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ பெண்களின் பங்கு மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. ஆண்களுக்கு சரி நிகராக இந்த மண்ணிலே போரிட்டு பல சாதனைகளை படைத்தவர்கள். இதனை உலகமே வியந்து பார்த்தது.
முதல் கடற்கரும்புலி அங்கயற்கண்ணி மற்றும் மகளிர் படையணிகளைச் சேர்ந்த முக்கிய தளபதிகள் மகளிர் அணிகளை வழிநடத்திய தளபதிகள் போராளிகள் இந்த மண்ணிலே பிறந்து வளர்ந்து இந்த மண்ணிலே வாழ்ந்தவர்கள் இவர்களுடைய சாதனைகள் இன்றும் பேசப்படுகின்றன.
ஆனாலும், யுத்தத்துக்கு பின்னர் இந்த பெண்கள் வாழ்வாதாரங்கள் இன்றியும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பெரும் நெருக்குதல்களையும் எதிர்நோக்கி வருகின்றனர.; இவர்களை இந்த சமூகத்தில் இருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எல்லோருக்கும் இருக்கின்றது. அவர்களுக்கு சுயமான ஒரு வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் இப் பிரதேசத்தை சேர்ந்த பெண்களுக்கு சுமார் 50,000 விற்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்களை தனது சொந்த நிதியிலிருந்து சண்முகராஜா ஜீவ ராஜா வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


















