-தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்-
-க.கனகராசா-
கீரிமலை புனித தீர்த்தக்கரை தண்டிகை கனகநாயக முதலியர் மட ஆதனம் பிரதேச சபையிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் இந்த இடம்எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென குறிப்பிட்ட வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் எதிர்காலத்தில் சமய ரீதியான சுற்றுலாத்தலங்களில் பிரதானமானதாக கீரிமலை மிளிருமெனவும் தெரிவித்தார்.
குறித்த ஆதனம் குத்தகைக்கு கையளிக்கும் வைபவம் கீரிமலையிலுள்ள இறைவன் எழுந்தருளும் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதில் அவர் தலைமை உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
தண்டிகை கனகநாயக முதலியர் மட ஆதனம் நீண்ட காலம் தனியாருடையதாக இருந்த நிலையில் தற்போது நீண்ட கால குத்தகை அடிப்படையில் பிரதேசசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இவ்விடம் தொடர்பில் பொது மக்களால் பல்வேறு குறைபாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ் ஆதனம் பிரதேசசபை ஆதனமில்லாததால் முற்றுமுழுதாக பிரச்சினைகளை தீர்க்க முடியாத நிலை காணப்பட்டது.
ஆனால் தற்போது இவ் ஆதனம் பிரதேச சபையிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டதால் இவ்விடத்தை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக ஈமைக்கிரியைகளுடன் சம்பந்தப்பட்ட கிரியைகளின் போது கடலில் அதிகளவு கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்களால் குறைபாடுகள் முன்வைக்கப்படுவதுண்டு. அதனை முறையாக்க குறித்த கடற்கரையை நிர்மாணிக்க 113 மில்லியனுக்கு மேற்பட்ட பாரியளவு நிதி தேவைப்பாடுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப் பெருமளவான நிதியை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்ற இடர்பாடுகள் உண்டு.
இதனை பூர்த்தி செய்ய எதிர்காலத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியூடாக சமய கிரியையுடன் தொடர்புடைய சுற்றுலாத்துறைக்குள் உள்வாங்குவதற்கு உள்ளூராட்சி திணைக்களத்துடன் கலந்துரையாடி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
எனவே இவ்விடத்திற்கு யாழ்ப்பாணத்தைக் கடந்து கிழக்கு மாகாணத்திலிருந்தும் மக்கள் வருகைதந்து கிரியைகளை மேற்கொள்ளும் நிலையுள்ளது. எதிர்காலத்தில் சமய ரீதியான சுற்றுலாத்தலங்களில் பிரதானமாக கீரிமலை மாற்றியமைக்கப்படும் என்றார்.


















