-8 திணைக்களங்கள் மீது குற்றச்சாட்டு-
எட்டு வகையான திணைக்களங்கள் ஊடாக சட்டபூர்வமாக எமது மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இதனால் மக்களின் வாழ்வாதாரம், வளங்கள் இழக்கப்படுகின்றன. கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை மேற்கொண்டு நடத்த முடியாத சூழல் ஏற்படுகின்றது என கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையப்பினை ஊடாக சந்திப்பு நேற்று மையலம்பாவெளியில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.
இதன் போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் மக்களின் காணி உரிமங்கள் பெறப்படாமலும், அவர்களின் இருப்பிடங்கள் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.
அந்த அடிப்படையில் அவர்களின் காணிகளை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
உள்ளுர் அரச அதிகாரிகள் திணைக்களங்கள் ஊடாகவும், சர்வதேச மட்டத்திலும் இது தொடர்பான பரிந்துரைகள் அறிக்கைகள் போன்றவற்றினை வெளியிட்டு வருகின்றோம்.
பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்ட அதே நேரத்தில் மக்களின் காணிகளைப் பெற்றுக் கொடுப்பதில்
பல தடைகளும் இருந்து வருகின்றது.
சில காணிகள் சட்டத்திற்குட்பட்டதாக அபகரிக்கப்பட்டு வருகின்றன. சில மகாவலி அபிவிருத்தி, அபிவிருத்திச் செயற்பாடுகள் என்ற போர்வையில், தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள், வன இலாகா, சுற்றுலா, பூஜா பூமி என்ற பௌத்த ஆலயங்கள் நிர்மானிப்பு போன்ற விடயங்களை முன்நிறுத்தி இந்தக் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் காணி அபகரிப்புகளுக்குப் பின்னால் முழுமையாக அரசாங்கம் இருக்கின்றது. தங்களை நல்லாட்சியான, இனவாதமற்ற ஆட்சியாளர்கள் என்று கூறிக் கொள்ளும் இந்த அரச தரப்பினர் தயவு செய்து வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை மேற்கூறப்பட்ட திணைக்களங்களின் ஊடாக அபகரிப்பதை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.


















