-நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் காட்டம்-
-காணி அமைச்சர், மாவட்டச் செயலரின் உத்தரவுகள் காற்றில்-
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானம் மற்றும் மாவட்டச் செயலரின் எழுத்துமூல கோரிக்கைகளை மீறி உப்பளம் அமைக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் கூறினார்.
பொதுமக்களின் முறைப்பாட்டினை தொடர்ந்து, கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதிக்கு நேற்று நேரில் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எம்.பி. அங்கு நடைபெறும் விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 12ம் திகதி வவுனியா மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மேற்படி உப்பளம் அமைக்கும் பகுதியில் தமிழ் மக்களின் நிலங்கள் உள்ளதால், அடாத்தான இந்த நில அபகரிப்பு நடவடிக்கையினை உடனடியாக நிறுத்தவேண்டும் எனக் கூறியதுடன், உப்பளம் அமைப்பதற்கு வனவள திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபை ஆகியன சட்டவிரோதமான அனுமதியை வழங்கியுள்ள நிலையில் அதனை உடனடியாக நிறுத்தி உப்பளம் அமைப்போர் மற்றும் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தேன்.
அதற்கு பதிலளித்த காணி அமைச்சர் கே.டி.லால்காந்த, உப்பளம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறும், அந்த விடயம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டச் செயலரை ஆராயுமாறும் பணிப்புரை வழங்கியிருந்தார். இதன்போது கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலர்,
2023ம் ஆண்டில் உப்பளம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உப்பளம் அமைக்கும் பகுதியில் தனியார் காணி இருப்பதாக பொதுமக்களும் எம்மிடம் முறைப்பாடு வழங்கியுள்ளனர். அதனை இனங்கண்டு உறுதிப்படுத்தவேண்டும் என கூறியிருந்தார்.
இதற்கமைய, முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஷ;வரன், மகாவலி அதிகாரசபைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் முன்னர் குறிப்பிட்டதைபோன்று, நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியமைக்கு அமைவாக,
தற்போது உப்பளம் அமைக்கப்படும் பகுதியில் தமிழ் மக்களின் நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் உள்ளடங்கி உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, உப்பளம் அமைக்கப்படும் நிலத்தின் உரிமையை உறுதிப்படுத்தவதற்காக உப்பளம் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை நிறுத்திவைக்குமாறு கோரப்பட்டிருந்தது.
ஆனால், உப்பளம் அமைக்கும் பணிகள் அங்கே தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுமக்களின் அழைப்பின் பெயரில் நான் நேரில் சென்று பார்வையிட்டிருந்தேன். அங்கே பெருமெடுப்பில் உப்பள பணிகள் நடக்கின்றது.
ஆக, காணி அமைச்சர், மாவட்டச் செயலர் சொல்வதையும் பொருட்படுத்தாமல் தாம் நினைத்தைதை செய்வதற்கான அதிகாரம் மகாவலி அதிகாரசபைக்கு இந்த ஆட்சியிலும் வழங்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளதுடன். இந்த அநியாயத்திற்கு அரசாங்கம் பதில் சொல்லி ஆகவேண்டும் எனவும் கூறினார்.


















