-இ.கலைஅமுதன்-
யாழ்ப்பாணம் – பண்ணை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பண்ணை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை, பின்தொடர்ந்து இரண்டுக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறைக் கும்பல், குறித்த இளைஞனை துரத்தி, துரத்தி சரமாரியாக வெட்டியுள்ளது.
இதனால் தப்பியோடும் முயற்சியில் படுகாயமடைந்த இளைஞர் பண்ணை கடலுக்குள் விழுந்த நிலையில், சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் படுகாயமடைந்த இளைஞனை மீட்டு, யாழ்.போதனா, வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதற்கிடையில், வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திய வன்முறைக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.


















