ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கையை மாகாண கல்வித் திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஆசிரியர்கள் அதற்கு எதிராக வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆசிரியர்கள் பலர் ஒன்று கூடி பல்வேறு வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு கோசம் எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இவர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் மாகாண கல்வி திணைக்களத்திற்கு மேல் முறையோடுசெய்தும் அந்த முறையிட்டினை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு மாகாண கல்வி திணைக்களம் வழங்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த சிலர் வடமாகண பொதுச்சேவைகள் ஆணைக் குழுவின் செயலாளர் ஆழ்வார்பிள்ளை சிறியைச் சந்தித்தனர்.
அதனைத் தொடர்ந்து குறித்த ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தமது மேல்முறையீடு பரிசீலனை செய்யப்பட்டு தேர்வு வழங்கும் வரை தாம் தற்போது பணியாற்றும் பாடசாலையிலே பணியாற்ற அனுமதி வழங்குமாறும் அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் தமது போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடரும் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


















