-க.சபேஷன், சொ.வர்ணன்-
சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நாவற்குழி விகாரை இளநிலை பிக்கு ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விகாரையை சூழவுள்ள பகுதியில் வசிக்கும் சிறுமி ஒருவர், விகாரை வளாகத்தில் வடிகட்டிய குடிநீரை பெறுவதற்காக நேற்றுமுன்தினம் சென்றார்.
இதன்போது, விகாரைக்கு புதிதாக வந்திருந்த இளநிலை பிக்கு ஒருவர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார். இது தொடர்பில் சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து தாயார் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இளநிலை பிக்குவை கைது செய்து, நேற்று சாவகக்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவானின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், பிக்குவை ஏப்ரல் 2ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


















