நாட்டில் பாரிய குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை, சர்வதேச பிடியாணை இல்லாமலேயே இலங்கைக்கு கொண்டு வரும் விசேட நடவடிக்கைகள் பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குற்றவாளிகளை நாடுகடத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் புதிய ஆட்சேர்ப்பு குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் நேற்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி எப். யூ. வூட்லர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,
இதன் ஒரு கட்டமாக, ஓமான் நாட்டில் வைத்து தென் மாகாணத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கொலை, சட்டவிரோத ஆயுதக் கடத்தல் மற்றும் பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் மீதான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
மேலும், கடந்த 28 ஆம் திகதி இந்தியாவில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் 2026 ஜனவரி மாதம் 4 கிலோவிற்கும் அதிக கொக்கெய்ன் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏப்ரல் 4ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, புனித வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்க பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
தேவாலயங்களில் வழிபாடுகள் நடைபெறும் போது சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது வாகனங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கோ அல்லது பங்குத்தந்தைகளுக்கோ அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் முப்படையினர் மற்றும் சிவில் உடையில் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

















