இடைநிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீள சேவையில் ஈடுபடுத்துமாறு கோரி மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேசத்தின் நவகிரிநகர் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டடனர்.
மட்டக்களப்பிலிருந்து தினமும் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் நவகிரிநகர் வரையில் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து அப்பகுதிக்குரிய சேவையை ஒருவார காலத்திற்கு மேலாக திடீரென நிறுத்தியதாக தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலரும் இணைந்து பதாகைளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போரதீவுப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் போராட்டகாரர்களுடன் கலந்துரையாடியதற்கிணங்க உதவிப் பிரதேச செயலாளர் இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பொது முகாமையாளருடன் தொடர்பினை மேற்கொண்டதற்கு அமைய,
நாளை முதல் மட்டக்களப்பிலிருந்து நவகிரிநகருக்கான போக்குவரத்துச் சேவை சீராக இடம்பெறும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் கிழக்கு மாகாண பொது முகாமையாளர் தெரிவித்ததாக ஆர்ப்பாட்டகாரர்களுக்கு உதவிப்பிரதேச செயலாளர் தெரிவித்தார்.


















