யுத்த காலத்தில் கட்டிலுக்கு அடியில் ஒளிந்துக் கொண்டிருந்தவர்கள் முன்னாள் அரச தலைவர்களின் உரித்துக்களை நீக்குகிறார்கள். பிரபாகரனை பயங்கரவாதி என்று முடிந்தால் குறிப்பிடுங்கள். அவர் குண்டுத் தாக்குதல் நடத்தியிருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கோருகிறேன் என யாழ். மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றுபுதன்கிழமை நடைபெற்ற ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நான் தமிழன் சபையில் சிங்களத்தில் பேசினால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். முடிந்தால் கைகளை உயர்த்தி பிரபாகரன் பயங்கரவாதி என்று குறிப்பிடுங்கள். ரோஹன விஜேவீர பயங்கரவாதியல்ல என்று என்னால் குறிப்பிட முடியும். சிங்களப் பிரபாகரன் என்று கருதியே தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள். இளங்குமரன், சந்திரசேகரன் ஆகியோரை மக்கள் அறிய மாட்டார்கள். 1988 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக நீங்கள் செயற்பட்டீர்கள் என்பதால் தான் தமிழ் மக்கள் உங்களுக்கு ஆதரவளித்தார்கள்.
இன்று நீங்கள் பாராளுமன்றத்துக்கு வந்துள்ளீர்கள் என்றால் அதற்கு அரச தலைவர்களே காரணம். உங்களை இராணுவத்தினர் தான் காப்பாற்றினார்கள். இன்று அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளீர்கள். உங்களை பாதுகாத்த இராணுவத்தினரை நெருக்கடிக்குள்ளாகுகின்றீர்கள்.
நான் ஜெனீவாவுக்கு சென்று, எமது மக்களின் உரிமைகள் பற்றிப் பேசுவேன். உங்களைப் பாதுகாத்தவர்களை குழிதோண்டிப் புதைக்கும் உங்களைப் போல் நான் செயற்படமாட்டேன் என்றார்.


















