தொல்லியல் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் புதிதாக நாட்டப்பட்ட எல்லைகற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பண்ணை சுற்றுவட்டார பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிக்கு மிக அருகாமையில் தொல்லியல் திணைக்களத்தினால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டுள்ளமை தொடர்பாக நேற்றைய தினம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேரடியாக சென்று ஆராய்ந்தாா்.
மேலும் குறித்த எல்லைக்கற்கள் வீதிக்கு அருகாமை காணப்படுவதனால் பாரதூரமான விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியப்பாடு காணப்படுவதாகவும் இது தொடர்பாக தொல்லியல் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரும் நேரடியாக வருகைதந்து பாா்வையிட்டதுடன்,

நாட்டப்பட்ட 48 எல்லைக்கற்களையும் அப்புறப்படுத்துவதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அளவுப் பிரமாணங்களுக்கமைய குறித்த அபிவிருத்தி அதிகார சபையின் எழுத்து மூல அனுமதியினைப் பெற்று எல்லைக்கற்களை நாட்டுவதற்கான நடவடிக்கைகளும் அரசாங்க அதிபரால் முன்னெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு கடிதம் மூலமும் அறிவிக்கப்பட்டது.
இவ் நேரடி ஆய்வில் தொல்லியல் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் பந்துல ஜீவ, யாழ்ப்பாணமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சா.சுதர்சன், உதவி மாவட்ட செயலாளர் உ.தர்சினி, தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மான உத்தியோகத்தர் பா.கபிலன், கோட்டை பொறுப்பதிகாரி எஸ்.உசாந்தினி ஆகியோா் உடனிருந்தனர்.


















