தியாக தீபத்திற்கு சிலை வைப்பதற்கும், பொக்கணை வீதிக்கு திலீபன் வீதி எனப் பெயர் மாற்றுவதற்கும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை முன்றலில் நேற்று பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு பொதுமக்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அஞ்சலிச் சுடரினை இந்நாள் பிரதேச சபையின் உறுப்பினர் விஜயதாரணி ஏற்றிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரதேச சபையின் அவை அமர்வில் தியாக தீபத்தினை நினைவு கூர்ந்து முன்னைய காலங்களில் திலீபன் வீதி என பிரயோகத்தில் காணப்பட்டு, பின்னரான சூழ்நிலையில் பொக்கணை வீதி காணப்படும் வீதியைப் புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும், அவ்வீதியின் பெயரை நிர்வாக நடைமுறைகளுக்கு அமைவாக திலீபன் வீதி என மீளவும் மாற்றி அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபன் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை வளாகத்தில் தியாக தீபம் திலீபனுக்கு திருவுருவச் சிலையை 1975 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க காட்சிப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம், உள்ளூராட்சி அமைச்சரின் அனுமதியைப் பெற்று நிறுவுவது என்று தவிசாளர் தியாகராஜா நிரோசினால் அவைத் தீர்மானத்திற்கு முன்வைக்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த தீர்மானங்கள் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















