மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்கு எதிராகவும், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறை மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்று மன்னாரில் பொது முடக்கல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளாரின் தலைமையில் குறித்த போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று மு.ப 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் உரிமைக்கான போராட்டத்தில் கடற்றொழிலாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல தரப்பினரும் கலந்துக்கொண்டு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரச அதிபருக்குக் கையளிக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.


















