இங்கிலாந்தின் மிடில்ஸ்பரோ அருகே கிராங்க்டவுன் பகுதியில் இடம்பெற்ற பாரிய வீட்டுத்தீ சம்பவம் தொடர்பில், 23 வயதான ஜேடன் ரைட் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி அதிகாலை, கிராங்க்டவுனில் உள்ள Birchington Avenue பகுதியில் வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 34 வயதான நடாலி மெக்டொனால்ட் மற்றும் அவரது 7 வயதான மருமகள் வலன்டினா ஃபொஸ்டர் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
மேலும், வீட்டில் இருந்த நான்கு பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகினர். 48 வயதான பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், 27 வயதான ஆணொருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு இளம் பெண்கள் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், ஜேடன் ரைட் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள், இருவருக்கு கடுமையான காயம் ஏற்படுத்தும் நோக்கத்திலான இரண்டு குற்றச்சாட்டுகள் மற்றும் அதே நோக்கத்திலான இரண்டு முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும், தீச்சம்பவத்திற்கு முந்தைய நாள் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் திட்டமிட்டு கழுத்தை நெரித்த குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது.
ரைட் இன்று Teesside Magistrates’ Court-இல் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், செப்டம்பர் 3ஆம் திகதி Teesside Crown Court-இல் மீண்டும் ஆஜராகும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்படாத நிலையில், சந்தேகநபருக்கு நியாயமான விசாரணைக்கான உரிமை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


















