காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடும் வகையில் மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (01) திறந்து வைத்தார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய், என். ஆனந்த் உள்ளிட்ட தனது அமைச்சரவை சகாக்கள் முன்னிலையில், வான் கதவுகளை திறப்பதற்கான பொத்தானை இயக்கி, வெளியேறிய காவிரி நீரின் மீது மலர்களைத் தூவி நீர்திறப்பைத் தொடங்கி வைத்தார்.
மாநிலத்தின் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க மேட்டூர் அணையை, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் விஜய் திறந்து வைப்பது இதுவே முதல் முறையாகும்.
அணை வளாகத்தில் விவசாயிகளுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் அடையாளமாகக் கருதப்படும் பச்சை நிறத் துண்டை அணிந்திருந்த அவர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் சேலம் பயணித்த விஜய், சாலை வழியாக மேட்டூரை அடைந்தார்.
நீர்த்தேக்கப் பகுதிக்குச் செல்லும் வழியில், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்து அவர் தனது பயணத்தை மேற்கொண்டார்.
சாலை ஓரங்களில் கட்சிக் கொடிக் கம்பங்களை நட்டும், முக்கியச் சந்திப்புகள் மற்றும் சாலை நெடுகிலும் வரவேற்புப் பதாகைகள் மற்றும் தோரணங்களை அமைத்தும், டிவிகே (TVK) கட்சியினர் முதலமைச்சருக்கு எழுச்சியான வரவேற்பளித்தனர்.
பல இடங்களில் மக்கள் அவர் மீது மலர்களைத் தூவி வரவேற்றனர்.
45 நாள் கால இடைவெளியில் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரானது சுமார் 12 மாவட்டங்களைச் சென்றடைகிறது.
இதில், தமிழகத்தின் ‘நெற்களஞ்சியம்’ என்று கருதப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் முதன்மைப் பயனாளிகளாக உள்ளனர்.
செப்டம்பர் 1-ஆம் திகதி நிலவரப்படி, 120 அடி முழு கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 91.56 அடி நீர் இருப்பு உள்ளது.
அணையின் வான் கதவுகளை திறப்பதற்கு வழக்கமாக ஜூன் 12 ஆம் கடைபிடிக்கப்பட்டாலும், போதிய பருவமழை இல்லாமை மற்றும் குறைந்த நீர் இருப்பு காரணமாக இம்முறை அந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.
காவிரி ஆற்று நீர் பகிர்வு தொடர்பாகத் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நிலவும் சர்ச்சைக்கு மத்தியில் இந்த நீர் திறப்பு நடைபெறுகிறது.
கர்நாடகா விடுவிக்க வேண்டிய நிலுவை நீரை விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் இவ்வழக்கு மீதான விசாரணையை செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.


















