தவெக அரசு 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்காது என தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.
தவெக அரசு 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்காது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல்வேறு இடங்களில் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இன்று (01) கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதும், இந்தக் கருத்தை மீண்டும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், அதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,
“கட்சி நிதி என சொல்வதை ஆளும் கட்சிதான் நிரூபிக்க வேண்டும். வெறும் வாயில் ஊழல் என்று சொல்லாமல், ஆதாரத்தையும் சேர்த்து வெளியிட வேண்டும். குறிப்பாக தவெக ஆட்சியில்தான் ஊழல் அதிகரித்திருக்கிறது. முன்பு 10 ஆயிரம் கேட்ட இடத்தில் தற்போது 20,000 ரூபா கேட்பதாக மக்கள் பேசுகிறார்கள்.
தற்போதும் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து பல லட்சங்களைப் பறிமுதல் செய்துவருகின்றனர். அப்படி என்றால் தவெக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் ஊழல் இருந்துவருவதாகதானே அர்த்தம்.
தற்போதுவரையிலும் நாங்கள் என்.டி.ஏ. கூட்டணியில் தொடருகிறோம். தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் ஒரு வருடம் வரை தள்ளிப் போகும் என நான் கருதுகிறேன்.
தவெக ஆட்சி பொறுப்பேற்று 110 நாட்களில் எத்தனை போராட்டங்கள் நடந்துவருகிறது. விவசாயிகள், செவிலியர்கள், மருத்துவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விலைவாசியும் உயர்ந்துள்ளது. அரிசி கிலோவுக்கு 15 ரூபா இல் இருந்து 20 ரூபா வரை உயர்ந்துள்ளது. சர்க்கரை கிலோ 25 ரூபா முதல் 30 ரூபா வரை உயர்ந்துள்ளது. ஆனால், இதனை எல்லாம் கட்டுப்படுத்த இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த ஆட்சி அமைந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளது. வருவாய் உயர்வுக்கான எந்தத் திட்டமும் இந்த அரசிடம் இல்லை. இதனை எல்லாம் பார்க்கும்போது இந்த அரசு 5 வருடங்கள் நீடிக்காது” இவ்வாறு தெரிவித்தார்.


















