-நாவற்காடு கிராம மக்கள் குற்றச்சாட்டு-
–பா.சதீஸ்-
வெள்ள நிவாரணம் வழங்கலில் கிராமசேவகர் முறைகேடாக செயற்பட்டதாக முள்ளியவளை – நாவற்காடு கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இது குறித்து கிராமத்திலுள்ள பெண்கள் நேற்று ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையில், நாவற்காடு கிராமசேவகர் பிரிவில் மட்டும், சுமார் 385 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அண்மையில் ஏற்பட்டிருந்த வெள்ள அனர்த்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும், கிராமசேவகர் பாதிப்பு நிலவரம் தொடர்பான பார்வையிடவில்லை. அவருடைய கையாட்கள் சிலரை பயன்படுத்தி தமக்கு பிடித்தவர்களின் பெயர் பட்டியலை மட்டும், நிவாரணத்திற்காக பதிவு செய்தார். இதனை தட்டிக்கேட்டால் பொலிஸாரை அழைத்து மிரட்டுகிறார். இந்த விடயம் மாவட்டச் செயலருக்கோ, பிரதேச செயலருக்கோ தெரியாது.
இது தொடர்பாக பெண் ஒருவர் கூறுகையில், மழை காரணமாக வீடு முழுவதும் ஒழுக்கு, மரங்கள் வீட்டின் மேல் முறிந்து விழுந்தது, வீட்டு பயிர்கள் எல்லாமே அழிவடைந்தன. பாம்பு வீட்டுக்குள் வந்து எனக்கு கடித்து உயிருக்கு போராடி சுகமடைந்து வந்துள்ளேன். இது தொடர்பாக கிராம சேவகருக்கு அறிவித்தல் வழங்கியும் இதுவரை வந்து பார்வையிடவில்லை. எம்மை ஒதுக்கியே வைக்கின்றார்கள். எனக்கு கணவர் இல்லை கடைசி பிள்ளைக்கு பிறப்பத்தாட்சி பத்திரம் எடுக்கச் சென்றபோது என்னை அவமானப்படுத்தி அனுப்புகிறார்.
என்னைபோல் பாதிக்கப்பட்டுள்ள பலர் கதைப்பதற்கு அச்சப்படுகின்றார்கள். ஆகவே பொறுப்புவாய்ந்தவர்கள் நேரடியாக பார்வையிட்டு மக்களுக்கு தீர்வு வழங்கவேண்டும் எனக் கூறினர்.
















