சாவகச்சேரியில் அமைக்கப்பட்டிருந்த நிலையில் இடித்தழிக்கப்பட்ட குமாரப்பா, புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபியை மீளவும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞா.கிஷோர் தெரிவித்துள்ளார்.
வீதியில் இருந்து நான்கு அடி தூரத்தில், தனியார் ஒருவரின் காணியின் எல்லைக்கு வெளியே குறித்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்தது. குறித்த காணியை பிரித்து விற்பனை செய்யும்போது அந்த இடத்தில் வாயில் வரும் என்ற காரணத்திற்காக இந்த நினைவுத்தூபி இடிக்கப்பட்டுள்ளது.
குமாரப்பா புலேந்திரன் உட்பட்ட விடுதலைப்புலிகளின் பல போராளிகளின் உருவப்படங்கள் இந்தத் தூபியில் இருந்த நிலையில் தூபியை உடைத்தவர் அதனை மீண்டும் கட்டித்தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எந்தவிதமான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.
பொதுமக்களுக்கோ அல்லது தனியாரின் காணிக்கோ இடையூறு இன்றி அந்த தூபி அமைந்திருந்தது. அந்த தூபி மீண்டும் கட்டப்பட வேண்டும்.
எங்களுடைய இனத்தின் நினைவுகள் எதிர்கால சந்ததியிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். ஆகவே இந்த தூபியை புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















