-மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர்-
-த.சுபேசன்-
வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு அதனூடாக சபை அமையும் பட்சத்தில் வடக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிக்கக் கூடிய சாத்தியப்பாடு காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தலைமையில், கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்த ‘ஊராட்சி முற்றக்’ கலந்துரையாடலின் போது, குடிசார் அமைப்புக்களுடைய பிரதிநிதிகள் முன்பள்ளி ஆசிரியர்களுடைய வேதன உயர்வு தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்த போதே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மாகாணசபையில் தீர்மானிக்கப்பட்டே தற்போது முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் ஆறாயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. எதிர்காலத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுடைய சம்பளத்தை உயர்த்துவது தொடர்பிலும் மாகாணசபையில் தான் தீர்மானிக்க வேண்டும். தற்போது மாகாணசபை இல்லாமையால் இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறலாம். மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்டு சபை அமையும் பட்சத்தில் துறைசார் அமைச்சு ஊடாக கொடுப்பனவை அதிகரிக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் இது தொடர்பாக பிரதம செயலாளர் அலுவலக பிரதிநிதி கருத்துத் தெரிவிக்கையில்;, முன்பள்ளி ஆசிரியர்களுடைய சம்பளப் பிரச்சினை தேசிய ரீதியான பிரச்சினை. எனவே இது தொடர்பாக மத்திய அரசின் கலந்துரையாடலின் போது பிரதம செயலாளர் ஊடாக மேற்படி பிரச்சினையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வடக்கு மாகாணத்தில் பெரும்பாலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே முன்பள்ளி ஆசிரியர்களாகக் காணப்படுவதாகவும், அவர்களுக்கு ஆறாயிரம் ரூபா கொடுப்பனவு எந்தவிதத்திலும் போதாது எனவும், சில இடங்களில் முன்பள்ளி ஆசிரியர் என்ற விடயத்தைக் காரணம் காட்டி நலன்புரி உதவித்திட்டம் கூட நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.


















