-இ.கலைஅமுதன்-
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அது தொடர்பில் சகல தமிழ்க் கட்சிகளுடனும் கூட்டிணைந்து ஒரு நிலைப்பாட்டை நிச்சயம் எடுப்போம் என கூறியுள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தமிழரசுக் கட்சிக்கும் ஒற்றையாட்சிக்கும் சம்மந்தமே இல்லை. அதனை நாங்கள் இப்போதும் நிராகரிக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், எந்த காலத்திலும் தமிழரசுக் கட்சிக்கும் ஒற்றையாட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதை நாங்கள் ஏற்கவில்லை என சொல்லிவிட்டோம். அதை பேசி பயனில்லை.
அரசியலமைப்பை பற்றி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இதுவரை பேசவில்லை. அது உத்தியோகபூர்வமாக வெளிவருகின்ற பொழுது நிச்சயமாக ஒற்றையாட்சியையும் ஏக்கிய ராஜ்ஜியவையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். அதற்கு மேலதிகமாக இது தொடர்பில் பிரசாரம் செய்வது அரசியல் தந்திரோபாயமே தவிர யதார்த்தம் அல்ல.
எங்கள் கட்சியினுடைய நிலைப்பாடு ஒற்றையாட்சி அல்ல. பிறகு நாங்கள் எவ்வாறு அதை ஏற்றுக் கொள்வோம். ஏக்கிய ராஜ்ஜிய அடிப்படையில் சில விடயங்களை பரிசீலிக்கலாம் என தற்போதைய அரசாங்கம் சொன்னதே ஒழிய ஏக்கிய ராஜ்ஜியவை கொண்டு வருவோம் என அவர்கள் சொல்லவில்லை. அதனை நாங்கள் மறுதலிக்கிறோம்.
அரசியலமைப்பு வருகின்ற பொழுது நிச்சயமாக நாங்கள் எல்லா தமிழ் தேசிய கட்சிகளோடும் கூட்டாக இணைந்து ஒரு நிலைப்பாட்டை எடுப்போம். அதை உறுதியாக சொல்ல விரும்புகிறோம். ஆரசியலமைப்பை அரசாங்கம் முன்னெடுக்கின்ற பொழுது எமக்கு தனித்த கருத்திருந்தாலும் கூட எல்லா தமிழ்த் தேசிய கட்சிகளையும் சேர்ந்து ஒருமித்த கருத்தை முன் வைப்பதற்கான சூழ்நிலையை நாங்கள் முன்னெடுப்போம். இணைந்து செயல்பட்டு முன் எடுப்பதற்கு நாங்கள் கட்டாயம் செயல்படுவோம். அதற்கான சிந்தனையும் எண்ணப்பாடும் எமக்கு உண்டு அது சம்பந்தமாக கட்சியிலும் மத்திய செயற்குழுவிலும் நாம் பேசுவோம். – என்றார்.


















