-கட்சியில் உள்ள ஒருவரே வேட்பாளர்-
-இ.கலைஅமுதன்-
முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்ய தமிழரசுக் கட்சி இனிமேல் இடமளிக்காது. மக்களுக்கும், கட்சிக்குள் பணியாற்றிய ஒருவரே முதலமைச்சர் வேட்பாளர் எனவும் அக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவாஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கியபோதே இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மாகாணசபைத் தேர்தல் தாமதிக்கப்படுவது வருத்தப்படக்கூடிய விடயம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கூறியிருக்கிறோம். முதலமைச்சர் வேட்பாளரை பொருத்தவரையில் எங்கள் கட்சியினுடைய தெளிவான நிலைப்பாடு, கட்சிக்குள்ளே இருந்து தான் யாராக இருந்தாலும் முதலமைச்சராக வேட்பாளரை தெரிவு செய்வோம். எந்த சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்யமாட்டோம்.
எங்களுடைய கட்சியின் அங்கத்தவராக இருக்கிறவர் தான் என்பதல்ல. யாழ்ப்பாணத்திலோ, வடமாகாணத்திலோ எங்களுடன் கட்சியுடன் இணைந்து செயற்பட்டவர்கள், கட்சிக்காக வேலை செய்தவர்கள், உழைத்தவர்களையே முதலமைச்சர் வேட்பாளராக நாங்கள் தெரிவு செய்வோம். கட்சியோடு தொடர்புடைய கட்சிக்கு பங்களிப்பைச் செய்த எவராவது ஒருவரில் பொருத்தமானவரை முதலமைச்சர் வேட்பாளராக நாங்கள் முன்மொழிவோம் – என்றார்.


















