-த.சுபேசன்-
வடக்கு மாகாணத்தில் மருத்துவசேவை ஒரே இடத்தில் குவிக்கப்படாமல் 5 மாவட்டங்களுக்கும் சமமாக பகிரப்படல் வேண்டும் என கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் காப்பாளர் ந.சச்சிதானந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை புலம்பெயர் உறவுகள் பெரும்பாலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உதவித் திட்டங்களை கோடிக்கணக்கில் வழங்கி வருகின்றனர். ஆனால் மாகாணத்தில் ஏனைய 4 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகள் பெரிதளவில் அபிவிருத்தி இன்றிக் காணப்படுகின்றன.
அபிவிருத்தி ஒரே வைத்தியசாலையை நோக்கி குவிக்கப்படுவதால் ஏனைய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளர்கள் மாவட்டம் கடந்து பல இடர்களைச் சந்தித்து யாழப்பாணம் நோக்கி வரவேண்டி உள்ளது.
அத்துடன் திறமையான வைத்தியர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்ற வேண்டியுள்ளது.
இதனால் ஒரு பக்கம் நோயாளர்களின் நேரம்,பணம் ஆகியன விரயமாவதுடன் மறுபக்கம் பெருமளவான வைத்தியர்களும் யாழ் .நகர் நோக்கி குடும்பமாக வந்து தங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இதனால் யாழ்ப்பாணத்தில் இட நெருக்கடி,போக்குவரத்து நெருக்கடி,சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
ஒரே மாவட்டத்தை தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்து கொண்டு செல்வது முற்போக்கான திட்டம் அல்ல.
அபிவிருத்தி அடையாத மாவட்டங்களையும் அபிவிருத்தி அடைந்த மாவட்டங்களுக்கு சமாந்தரமாக கொண்டு வர வேண்டும். அதுவே முற்போக்கான சிந்தனை. அந்த மாவட்ட மக்களுக்கும் மருத்துவ சேவை அருகாமையில் கிடைக்க வேண்டும்.இதனால் பாரிய சிரமங்களை தவிர்க்க முடியும். எனவே அரசாங்கம் மற்றும் புலம்பெயர் உறவுகள் எதிர்காலத்தில் மருத்துவ உதவிகளை வழங்கும் போது இதனைக் கருத்திற் கொள்ள வேண்டும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.


















