-சொ.வர்ணன்-
தமிழ் மக்களுக்கான அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு தமிழ் அரசியல்வதிகளை ஒழுங்குபடுத்த முடியாத சூழ்நிலையில் தமிழ் – முஸ்லிம் உறவை ஒழுங்குபடுத்துவது சவாலான விடயமென அரசியல் ஆய்வாளர் சிஅ .யோதிலிங்கம் தெரிவித்தார்.
யாழ். தந்தை செல்வா நினைவு அரங்கத்தில் அண்மையில் இடம்பெற்ற தமிழ் – முஸ்லிம் உறவை கட்டியெழுப்புவதற்கான கலந்துரையாடலில் அவர் கலந்து கண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
தமிழ் – முஸ்லிம் மக்கள் இணைந்து பயணிப்பது காலத்தின் தேவையாக உள்ளது. இந்தப் பயணம் அரசியல் நோக்கத்திற்கான ஒன்றிணைவாக இல்லாமல் உண்மையான சாத்தியமான இணைவாக அமைய வேண்டும்.
தமிழரசுக் கட்சியுடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள் பிரதேச சபைகள் மற்றும் மாகாண சபைகளில் இணைந்து ஆட்சி அமைத்தமை வரவேற்கத்தக்க விடயம்.
இந்த அரசியல் ரீதியான இணைவைத் தாண்டி தமிழ் – முஸ்லிம் உறவு பலப்படுத்தப்பட வேண்டும். அது இன்னும் இடம்பெறவில்லை.
இலங்கையில் ஏற்படும் ஆட்சி மாற்றங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஆளுங்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை வழமையான செயற்பாடு.
ஆனால் தமிழ் அரசியல் வித்தியாசமானது. 70 வருட காலமாக தமது இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக எதிர்ப்பு அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.
முஸ்லிம் தலைவர்களில் அஷ்ரப், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொண்டமான், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தாலும் அரசாங்கத்துக்குள் இருந்து தமது இனத்துக்காக எதிர்ப்பு அரசியலை மேற்கொண்ட தலைவர்கள்.
இவ்வாறான தலைவர்கள் இல்லாத சூழ்நிலையில் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக அரசியலை ஒன்றிணைப்பது தற்போது வரை இயலாது உள்ளது.
தமிழ் – முஸ்லிம் இடைவெளி மக்களில் மனங்களில் ஏற்பட்டது அல்ல அது அரசியல் நோக்கத்துக்காகவே இன்று வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆகவே தமிழ் – முஸ்லிம் இணைப்பை ஏற்படுத்துவதற்கு அரசியலைக் கடந்து அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்றார்.


















