-த.சுபேசன்-
கைதடி தெற்கு வட்டாரத்திலுள்ள கட்டை பறித்தான் வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு சாவகச்சேரி பிரதேசசபைத் தவிசாளரிடம் கடிதம் மூலம் பிரதேச பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்படி கடிதம் கைதடி தெற்கு வட்டார உறுப்பினர் செ.ஜெயபாலன் ஊடாக தவிசாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கட்டை பறித்தான் வீதியானது கடந்த காலங்களில் கம்பெரலிய திட்டம் ஒரு பகுதியும், சாவகச்சேரி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீடு ஊடாக இன்னொரு பகுதியும் புனரமைப்பு செய்யப்பட்டது.
எனினும்வீதியின் நடுப்பகுதியான சுமார் 210 மீற்றர் தூரம் புனரமைப்பு செய்யப்படாமல் இருந்து வருகின்றது.
இவ் வீதியினை மாணவர்கள், அரச நிறுவனங்களில் பணிபுரிவோர், விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
மாரி காலத்தில் வீதியின் புனரமைக்கப்படாத பகுதியில் வெள்ள நீர் தேங்கி இருப்பதால் இவ்வீதியூடாக பயணிப்போர் பெரும் சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
எனவே இவ்விடயங்களை கருத்தில் கொண்டு புனரமைப்பு செய்யப்பட வேண்டிய பகுதியினை விரைவாகப் புனரமைப்பு செய்து தருமாறு கோருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

















