-சி.ஜெகதீஸ்வரன்-
பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப் பெயர்களை சூட்டுவதனை ஊக்குவிக்க தமிழர் பகுதிகளில் 46 ஆயிரம் தமிழ்ப் பெயர்த் தொகுப்பு நூலினை அறிமுகம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக தமிழ் அமுதம் தமிழ்ப் பணிக்குழுவின் வெற்றி அரசன் தெரிவித்தார்.
பருத்தித்துறையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் அமுதம் அமைப்பின் வெளியீடான 46 ஆயிரம் தமிழ்ப் பெயர்த் தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வில் அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
தமிழர்களாகிய நாம் எமது அடையாளங்களை இழந்து வருகின்றோம். எமது பிள்ளைகளின் பெயர்களை கூட தமிழ்ப் பெயராக வைக்கும் ஆர்வம் வெகுவாக குறைந்து வருகிறது. இவ்வாறான நிலையில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு தூய தமிழ்ப் பெயர்களை சூட்டுவதனை ஊக்குவிக்கும் முகமாக வட – கிழக்கு உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் குறித்த நூலினை அறிமுகம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இந்த நூலினை தொகுத்து வெளியிடும் பணியில் நாம் ஈடுபட்டுள்ளோமே தவிர இதனை உருவாக்கியது நாங்கள் அல்ல.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தமிழ் வளர்ச்சிக்கழகத்தினால் தமிழேந்தி அவர்களின் கடின முயற்சியால் வெளியிடப்பட்ட தமிழ்ப் பெயர் கையேட்டில் உள்ள பெயர்களை ஆதாரமாகக் கொண்டுதான் இந்தப் புத்தகத்தை தயாரித்துள்ளோம். அது ஒரு பொக்கிசம். அதனை இன்றும் சிலர் வைத்திருந்தாலும் காலப்போக்கில் இல்லாமலே போய்விடும் நிலை உள்ளது. அந்தத் தமிழ்ப் பெயர் திரட்டை உள்வாங்கி இந்த நூலினை தயாரித்துள்ளோம். இதனை பருத்தித்துறை முதல் அம்பாறை வரை கொண்டு சென்று மக்களிடம் சேர்ப்பிக்க உள்ளோம் என்றார்.


















