-இ.கலைஅமுதன், க.சபேஷன்-
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்துக் குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்திப் பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலையமொன்றிலேயே பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சோதனை மேற்கொண்டனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த சிலருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு இன்னொருவரிடமிருந்து கைத்துப்பாக்கியின் புகைப்படம் அனுப்பப்பட்டமை பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனொரு கட்டமாக கைத்துப்பாக்கியின் புகைப்படத்தை அனுப்பிய நபரின் விற்பனை நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


















