-சொ.வர்ணன்-
தற்போதைய அரசின் கல்விக்கு எதிரான தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்து முழு இலங்கையும் ஒன்றிணைந்த அதிபர்கள் ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசு பாடசாலை நேரத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.பாடசாலை நேரத்தை அதிகரிக்க வேண்டுமானால் அதிபர்கள் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி சாதகமான முடிவை காண வேண்டும்.
ஆனால் இந்த அரசு தான் நினைத்த மாதிரி முடிவு அதிபர்கள் ஆசிரியர்களுடன் கலந்துரையாடாமல் சர்வாதிகார போக்கில் செயற்படுகிறது. கல்வியை சீர்திருத்தம் என்ற போர்வையில் பாடசாலை நேரத்தை இரண்டு மணி வரை நீடிப்பதற்கு நாம் எமது எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்.
பாடசாலைகளில் அனேகமான அதிபர்கள் ஆசிரியர்கள் மாலை 5 மணி வரை பாடசாலைகளில் நேரத்தை செலவழிக்கிறார்கள். இவ்வாறான ஒரு நிலையில் உள்ளவர்களுடன் கலந்துரையாடாமல் நேரத்தை அதிகரிப்பதற்கு எதிராக டிசம்பர் 12 ஆம் திகதி அதிபர்கள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
2013 வரவேண்டிய கல்விச் சீர்திருத்தம் இன்னும் இடம்பெறவில்லை. அத்தோடு தரம் ஒன்று தொடக்கம் ஆறு வரை கல்வியை சீர்திருத்தம் 2026 இல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் நிலையில் க.பொ.த. சாதாரண தரத்துக்கு 2030 கல்வி சீர்திருத்தம் செய்யப் போவதாக கூறுகிறார்கள்.
ஆகவே இந்த அரசின் சர்வாதிகார முடிவுகளுக்கு எதிராக எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி அதிபர்கள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தமது எதிர்ப்பை காட்டவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிடுகிறார்.


















