இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பிரசன்ன ரணதுங்கவை 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்க பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட நான்கு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து மருத்துவக் காப்புறுதி பெறப்பட்ட போது, ஒரு நிறுவனத்திற்கு அநியாய இலாபம் பெற்றுக்கொடுத்ததன் மூலம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு ரூ.4,750,828.72 நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்த போது அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கைதுசெய்யப்பட்ட பிரசன்ன ரணதுங்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















