-க.கனகராசா-
எமது எண்ணமே எங்களை உயர்த்தவும் தாழ்த்தவும் உதவுகிறதென தெரிவித்த உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் விளையாட்டில் ஈடுபடுவதனால் சிறப்பாக கல்விகற்க முடியும் என்ற சிந்தனையை மாணவர்கள் வளர்க்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
உடுவில் பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் மயூரன் தலைமையில் உடுவில் பிரதேசத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான வலைப்பந்தாட்ட பயிற்சி முகாமின் இறுதி நிகழ்வு இராமநாதன் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில் அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
விளையாட்டு புத்துணர்ச்சியையும் புரிந்துணர்வையும் நல்ல சிந்தனையையும் தூண்டும். இவ்வாறான நிலையில், இதற்கு மாறாக நாம் விளையாடினால் நல்ல நித்திரை கொள்ளலாம் என்ற சிந்தனையை வளர்ப்பதனால் உள்ளமும் உடலும் அதற்கு தயார்ப்படுத்துகின்றது.
இதனால் வீட்டிற்கு சென்றதும் நித்திரைக்கான ஏற்பாடே நடந்தேறும். இதனைப் பாக்கின்ற பெற்றோர் விளையாடினால் பிள்ளைகள் நித்திரை செய்வார்கள் என்ற முடிவுக்கு வருவதுடன் அதற்கு தடைபோடுகின்றனர். விளையாட்டை வெறுக்கின்றனர்.
இதனைக்கருத்தில் கொண்டு நீங்கள் விளையாடிவிட்டு சென்று சிறப்பாக கற்றலில் ஈடுபட்டால் பெற்றோர் மகிழ்வதுடன் விளையாட்டிற்கு தடைபோடமாட்டார்கள். மேலும் விளையாட்டிற்கு பெற்றோரின் பங்களிப்பு அதிகரிக்கும். உண்மையில் விளையாட்டில் ஈடுபடுவதனால் மூளைக்கும் கண்களுக்கும் அதிகளவு குருதி செல்லும்போதும் கற்றலுக்கு இரண்டு உறுப்பும் களைப்படைய மாட்டாது. கற்பதை மூளையும் சிறப்பாக பதிவுசெய்யும். அத்துடன் உடலின் அசைவுத்திறனும் ஒத்திசைவாக செயல்படும்.
இதனை விஞ்ஞானபூர்வமான ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன இதனைதான் ஆசிரியர்கள் கற்றலில் சிரமப்படும் மாணவர்களை பார்த்து கேட்பார்கள் கழுத்திற்கு மேல் இரத்தம் போகவில்லையா என்று. இது உண்மையானதே. இதனை உணர்ந்து விளையாடுவதால் கல்வியில் உயந்த இலக்கை அடைவதற்கு உதவும் என்ற எண்ணத்தை உள்ளத்தின் ஆழ்மனதில் பதித்தால் நிச்சயம் கல்வியிலும் விளையாட்டிலும் சாதிக்கமுடியும். எனவே எமது எண்ணமே எங்களை உயர்த்தவும், தாழ்த்தவும் உதவுகிறது எனத்தெரிவித்தார்.


















