-வி.சரவணன்-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு பன்னாட்டு நீதி விசாரணையை மேற்கொண்டு அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாட்டு அமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்திற்கான நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாடு அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டும்.வடக்கு, கிழக்கில் கடந்த போர்க்காலத்தில் படையினராலும், படையினருடன் சேர்ந்தியங்கிய ஆயுதத் துணைக் குழுக்களாலும் பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். அதேவேளை இறுதிக்கட்டப் போரின்போது வட்டுவாகல் மற்றும் வவுனியா ,ஓமந்தை சோதனைச்சாவடி பகுதிகளில் இராணுவத்தினரிடம் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.
இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைக்கோரி அவர்களது உறவினர்கள் வடக்கு, கிழக்கில் மூவாயிரம் நாட்களைக் கடந்தும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கணவன் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் மனைவியர்கள் குங்குமத்தை இடுவதா? தாலி அணிவதா? அணியாமல் விடுவதா? எனத் திணறுகின்றனர். தந்தை வருவாரா? வரமாட்டாரா? எனப் பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதிலளிப்பது எனத் தெரியாமல் திண்டாடுகின்றனர். இவ்வாறாக ஒன்றரை தசாப்த காலத்திற்கும மேலாக மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத ஓர் அவல வாழ்வு வாழ்கின்றனர்.
அதேவேளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல நூற்றுக்கணக்கான பெற்றோர் வயது முதிர்வினாலும், நோய் வாய்ப்பட்டும் உயிரிழந்துள்ளனர்.
எனவே எப்போது இவர்களுக்கான நீதியை வழங்கப்போகின்றீர்கள்? இவ்வாறு அனைவரும் மரணித்த பின்புதான் நீதியை வழங்கப் போகின்றீர்களா? அவ்வாறெனில் அது நீதியாகுமா?
ஆகவே காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமன் என்பதைக் கருத்திற் கொண்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கோரிக்கைக்கு அமைவாக, பன்னாட்டு நீதி விசாரணையின் ஊடாக அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு இவ் உயரிய சபையைக் கோருகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.


















