யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக கோரப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு யாழ். பல்கலைக்கழக பதிவாளருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் இருவரது விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் ஒருவர் சந்தேகம் எழுப்பியதால், இருவரது விண்ணப்பங்களையும் ஏற்றுக் கொள்வது தொடர்பில் பல்கலைக்கழகப் பதிவாளரால் மானியங்கள் ஆணைக்குழுவின் தெளிவுபடுத்தலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி அந்த இருவரையும் துணைவேந்தர் தெரிவுக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நான்கு பீடாதிபதிகள், இரண்டு முன்னாள் பீடாதிபதிகள் மற்றும் வெளிவாரி விண்ணப்பதாரி ஒருவர் உட்படத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்த ஏழு பேருக்குமான நேர்முகத் தேர்வு எதிர்வரும் டிசெம்பர் 7 ஆம் திகதி நடைபெற உள்ள விசேட பேரவைக் கூட்டத்தில் இடம்பெறவுள்ளது.
தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இந் நிலையில், துணைவேந்தர் தெரிவுக்கான மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கையின் பிரகாரம் பல்கலைக்கழக பேரவை செயலாளரினால் கடந்த செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.


















