-தவிசாளர் நிரோஸ்-
வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை எல்லைக்குள் அதிக வெள்ளப்பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் உடனடி உணவு உதவிகள் தேவையாகவுள்ளன என உதவிகளை நல்கக் கூடியவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக தவிசாளர் தியாகராஜா நிரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
எமது பிரதேசம் பொதுவாக வசதிக்குறைவான மக்களைக் கொண்ட பகுதியாகும். குறிப்பாக ஒவ்வொரு கிராமங்களின் ஐம்பது சதவீதமான பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் முகாம்களுக்குச் செல்வோருக்கே உடனடி உதவி என்ற சுற்று நிருபத்தை வெளியிட்டிருந்தது. அதன் வாயிலாக வீடுகளுக்குள் கடும் வெள்ளப் பாதிப்புக்களை எதிர்கொண்டு முடக்கப்பட்டுள்ள மக்கள் உணவுக்குத் திண்டாடும் நிலை உள்ளது. இந் நிலையில் முகாம்களுக்குள் செல்ல முடியாதவர்களுக்கு உதவிகள் கிட்டவில்லை.
பிரதேசத்தில் ஏற்கனவே பலருக்கும் ஒருவகை வைரஸ் காய்ச்சல் உள்ள நிலையில் முகாம்களுக்குள் செல்லவதை மக்களில் பலரும் விரும்பவில்லை. இந்நிலையில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். முதியவர்கள், சிறுவர்கள், நோயாளிகள் என பலரும் உடனடி உணவிற்கே திண்டாடுகின்றார்கள். தற்போதைய நிலையில் முகாம்களுக்கள் சென்றால் தான் உதவி என்ற நிலையில் சுற்றுநிருப மாற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எவ்வாறிருந்த போதிலும் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச உதவிகள் சென்றடைய வேண்டும். மேலும் தன்னார்வலர்களின் உதவிகள் ஆங்காங்கே குறைந்தளவில் கிடைக்கப்பெற்று வருகின்றன. இந்நிலையில் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் காணப்படுவதால் அவற்றிற்கு உதவிகளை நல்க முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















