-த.சுபேசன்-
சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேகமாக பரவி வருகின்ற பாதீனிய விஷச் செடிகளை அழிக்க நகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபை உறுப்பினர் பாலமயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வின்போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பல இடங்களிலும் பாதீனிய செடி மிக வேகமாக பரவி வருகின்றது.
இந்தச் செடிகள் பூக்கும் முன்னர் நாம் அவற்றை அழிக்காது விட்டால் அவற்றினூடாக இலட்சக்கணக்கான செடிகள் பரவி அழிவை ஏற்படுத்தும்.
சாவகச்சேரியில் பல தனியார் காணிகளில் பாதீனிய பரவல் காணப்படுகின்றது. குறித்த காணிகளின் உரிமையாளர்களுக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கி விஷச் செடியை அழிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செடியை அழிக்கத் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு அவர்களை உட்படுத்த சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.


















