-சொ.வர்ணன்-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் நோக்கத்திற்காக கிராம அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற நியமனங்களை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
நேற்று சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடலில் கிராம அபிவிருத்தி தலைவர் நியமனம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தியின் வங்குரோத்து அரசியல் செய்வதற்காக சமூக கிராம அபிவிருத்தி குழுத் தலைவர் என்ற நியமனத்தை கொடுக்கிறது. அதனை அரச அதிகாரிகள் மேற்கொள்கிறார்கள்.
அரச அதிகாரிகள் மீது நான் குற்றம் சொல்லவில்லை ஏனெனில் அவர்களை செய்யுமாறு மேலிடம் பணிக்கிறது வேறு வழியின்றி அவர்களும் நியமனத்தை வழங்குகிறார்கள். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்த ராஜாவுக்கு கூட கிராம அபிவிருத்தி குழு தலைவர் நியமனத்தில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.
வேறு வழியில்லை அவரும் அரசாங்கத்தின் மேலிடம் கூறுவதை ஆமோதித்து தான் ஆக வேண்டும். குறித்த விடையம் தொடர்பில் நானும் பாராளுமன்றத்தில் பேச இருக்கிறேன் சக பாராளுமன்ற உறுப்பினர்களையும் பேசுமாறு உள்ளூர் ஆட்சி மன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் கூறுங்கள்.
குpராம மட்டங்களில் மக்களின் தேவைகளை கண்டறிந்து செயல்படுத்துவதற்கு மக்கள் உள்ளூராட்சி மன்றங்களுடாக ஜனநாயகரீதியில் பிரதிநிதிகளை நியமித்தார்கள்.
நான் ஒன்றை கூற விரும்புகிறேன் தேசிய மக்கள் சக்தியினர் அரசியல் செய்வதற்காக யாரை வேண்டுமானாலும் நியமிக்கட்டும் அவர்களின் செயற்பாடுகளை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அவர்கள் நினைத்தது போன்று செயற்பட முடியாது, செயற்பட்டால் அதையும் பார்த்துக் கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


















