-பெரும் பாதிப்பு என்கிறார் கல்வி அபிவிருத்தி குழுமத்தின் காப்பாளர் சச்சிதானந்தன்-
-த.சுபேசன்-
வடக்கு மாகாணத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான NVQL – 5 பயிற்சி தமிழ் மொழியிலும், பரீட்சை ஆங்கில மொழியிலும் நடைபெறவிருப்பதால் ஆசிரியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் காப்பாளர் நடராசா சச்சிதானந்தன் கவலை வெளியிட்டார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான NVQL – 5 பயிற்சி கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் நிதி பங்களிப்புடன் யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில் தமிழ் மொழியில் வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனால், அவர்களுக்கான பரீட்சை எதிர்வரும் மாதம் ஆங்கில மொழியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பயிற்சி பெற்று வருகின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் உள ரீதியாக பாதிப்படைந்துள்ளனர். இது தொடர்பாக அரசாங்கம் விரைந்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பாதிப்பு இல்லாத விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான முன்பள்ளி ஆசிரியர்கள் உள்ள போதிலும் அதில் பெரும்பாலானவர்கள் உரிய கல்வித் தகுதியைப் பூர்த்தி செய்யாதவர்களாகக் காணப்படுகின்றனர்.
அதனைக் கருத்திற் கொண்டு கல்வி அபிவிருத்தி குழுமம் நிதி அனுசரணை வழங்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்கள் ஊடாக டிப்ளோமா பயிற்சிகளை வழங்கிவருகின்றது.
எனவே இவ்வாறு தமிழ் மொழியில் பயிற்சி பெறுகின்ற ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழியில் பரீட்சை நடத்துவது அவர்களை மன ரீதியாகப் பாதிக்கும் என மேலும் அவர் தெரிவித்தார்.


















