-கஜிந்தன்-
துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார்.
மட்டுவில் கிழக்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த அருணாசலம் சத்தியசீலன் (வயது-75) என்பவரே உயிரிழந்தார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கனகம் புளியடி வீதியில் இருந்து, புத்தூர் சந்தியூடாக நேற்று முன்தினம் மாலை துவிச்சக்கர வண்டியில் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தார். மெய்கண்டான் சந்திக்கு அண்மித்த பகுதியில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதி விபத்து சம்பவித்தது.
இதன்போது, அந்த இடத்திலேயே அவர் மயக்கமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். இது குறித்து விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















