-பௌத்த மதத்திற்கு எதிரானதல்ல- கஜேந்திரகுமார்-
-விடுதலைப் புலிகள் செய்யாததை தமிழ் மக்கள் செய்யமாட்டார்கள்-
-சொ.வர்ணன்-
யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை வலுக்கட்டாயமாக அகற்றுவதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் விரும்பவில்லை. சட்டரீதியாக மக்கள் தமக்கான நியாயத்தை பெறுவதற்கு முயற்சிக்கிறார்களே அல்லாமல், சட்டத்திற்கு மாறாக கட்டப்பட்ட விகாரையை சட்டம்தான் அகற்றவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ விகாரையை இடிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்கள் அபகரிக்கப்பட்டு அங்கு விகாரை கட்டப்பட்டுள்ளது. அதற்கு நியாயம் கேட்டு நாங்கள் 2 வருடங்களுக்கு மேலாக ஜனநாயக வழியில் போராடுகிறோம்.
ஒருபோதும் அந்த சட்டவிரோத கட்டுமானத்தை அடாத்தாக அகற்றவேண்டும் என நினைத்ததில்லை. அதனை சட்டம்தான் அகற்றவேண்டும். வலி,வடக்கு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் இந்த சட்டவிரோத கட்டிடத்தை சூழ காணப்பட்டிருந்த நான்கு கிறிஸ்த்தவ தேவாலங்கள் மற்றும் ஒரு இந்து
ஆலயம் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டு மயிலிட்டி பிள்ளையார் ஆலயம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த காலத்தில் பாதுகாப்பு தரப்பினரின் அனுமதியுடன் ஒருநாள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டபோது அதில் கலந்துகொண்டிருந்த மக்கள் ஆலயம் முழுமையாக இருந்ததாக கூறுகின்றனர். ஆனால் இன்று அந்த ஆலயம் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டிருக்கின்றது.
ஆக, சட்டரீதியான ஆலயங்களை அழிக்க முடியும் என்றால் சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டிடத்தை அகற்றுவதில் என்ன தவறு? ஆனால், அவர்களைபோல் அல்ல நாம், நாம் மற்றைய மதங்களையும் மதிக்கிறோம். அவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. தமிழீழ விடுதலை புலிகள் கூட அவ்வாறான ஒரு செயலை செய்ததில்லை. செய்ய நினைக்கவும் இல்லை. மாறாக பாதுகாத்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் உள்ள விகாராதிபதிகள் இன்று என்ன கூறுகிறார்கள், தையிட்டியில் புத்தபெருமானின் பெயரில் மக்களின் காணிகள் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். மக்களின் காணிகளை பிடித்து விகாரை கட்டுமாறு புத்தபெருமான் போதிக்கவில்லை என கூறுகிறார்கள். தையிட்டி மக்களின் காணிகளை மக்களிடம் கொடுங்கள் என கூறுகிறார்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? தையிட்டி விகாரை மக்களின் காணிகளை அபகரித்து கட்டப்பட்டது என்ற உண்மையை பௌத்த துறவிகளால் மறுக்க முடியவில்லை. நாம் பௌத்த மதத்தை இழிவுபடுத்த வில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து பௌத்த மதத்தை அகற்றுமாறு கூறவில்லை.
நாம் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகளையே கேட்கிறோம். ஆக, நாம் காணிகளுக்காக போராடுகிறோமே அல்லாமல் இனவாதிகளோ, மதவாதிகளோ அல்ல என்றார்.


















