-பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் சுட்டிக்காட்டு-
-இ.கலைஅமுதன்-
யாழ்.வலி,வடக்கில் விடுவிக்கப்படாத 2500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உடனடியாக விடுவிக்க கூடியநிலை காணப்படுகிறது. இவ்வாறான இடங்களை விடுவிப்பதன் மூலம் மக்கள் தமது மீள்குடியேற்றத்தை உடனடியாக செய்யக்கூடியதாக இருக்கும் என வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இன்னமும் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டி இருக்கிறது. பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு, மயிலிட்டி தெற்கு என்ற மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டி இருக்கிறது.
வலிகாமம் வடக்கின் 6ம் வட்டாரத்தில் ஒரு மக்கள்கூட மீளக்குடியேறாமல் இருக்கின்றார்கள். அது இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கின்றது. பல காணிகள் இராணுவம் பயன்படுத்தாமல் பற்றைகள் மண்டி இருக்கிறது. மயிலிட்டி வடக்கின் பல காணிகள் இராணுவ பயன்பாடு இல்லாமல் கடற்கரை பிரதேசமாக இருக்கிறது. இந்தப் பகுதி மக்கள் பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு பகுதிகளில் நண்பர்கள் அயலவர்கள் வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் மீள்குடியேறுவதற்கு வசதியாக அங்கு இராணுவ முகங்கள் அகற்றப்பட வேண்டிய தேவை இல்லை. மக்களின் காணிகள் பற்றையாகவே உள்ளது. அதை விடுவிக்க வேண்டும்.
பலாலி வீதியின் கிழக்குப் பகுதியில் கிட்டத்தட்ட 600 ஏக்கர் நிலங்கள் வரை விமான நிலைய விஸ்தரிப்புக்கு தேவையில்லாத இடங்களை இராணுவ உயர் பாதுகாப்பு வலயம் என வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வசாவிளான் சந்தியை அண்மித்த மானம்பிராய் பிள்ளையார் ஆலயத்தோடு இணைந்த மூன்று கோயில் காணிகள் விடுவிப்பதற்கான சம்மதம் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி எடுக்கப்பட்டும் கூட அது உயர் பாதுகாப்பு வலயமாக வைக்கப்பட்டுள்ளது.
குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளில் இராணுவ முகாம்கள் இல்லாமல் இராணுவத்தினுடைய விவசாய தேவைக்காகவும் பற்றை காடுகளாகவும் பயன்படுத்த முடியாத காணிகள் இருக்கின்றது. அதை உடனடியாக விடுவிக்க வேண்டும். 2500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் ஆயிரம் ஏக்கர் நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கூடிய நிலை காணப்படுகிறது. இவ்வாறான இடங்களை விடுவிப்பதன் மூலம் மக்கள் தமது மீள்குடியேற்றத்தை உடனடியாக செய்யக்கூடியதாக இருக்கும்.
1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெயர்ந்து சென்றாலும் தொடர்ச்சியாக 35 ஆண்டுகளுக்கு மேலாக இன்று வரை தமது நிலங்களுக்கு திரும்ப முடியாமல் மக்கள் இருக்கின்றனர். ஆகவே இந்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பி வாக்களிக்கத்த மக்களுக்காக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆறாம் வட்டாரத்தை சேர்ந்த மக்கள் நம்பி தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் இன்று ஓர் ஆண்டை கடந்தும் அந்த மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை. ஜனாதிபதி தைப்பொங்கல் தினத்தன்று வருகை தரும் போது அந்த பிரதேசங்களை விடுவித்து, மக்களின் வாழ்வாரத்தை கட்டி எழுப்ப உதவி செய்ய வேண்டும். பாதைகள் திறப்பு சம்பந்தமாக கூறப்பட்டாலும் பலாலி வீதி இரவு 7 மணி வரையே திறக்கப்பட்டுள்ளது. அதனை 24 மணி நேரமும் பயன்படுத்தக்கூடிய நிலையை உருவாக்கவேண்டும்.
வசாவிளான் சந்தியில் இருந்து கட்டுவன் சந்தியூடாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு வருவதற்கான பாதை 35 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்ட நிலைமையிலே காணப்படுகிறது. அந்த வீதியை திறந்து விட வேண்டும். உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி வீதியையே திறக்கும் போது இந்த வீதியை திறக்க எந்த தடையும் இல்லை. வலிகாமம் கிழக்குப் பகுதியில் உள்ள மக்கள் பிரதேச செயலகத்திற்கோ வைத்தியசாலைக்கோ வருவதற்கு பல கிலோமீற்றர்கள் சுத்தி வர வேண்டி உள்ளது.
இடைக்காட்டில் இருந்து தம்பாலை ஊடாக பலாலி வீதியை சந்திக்கின்ற பகுதி இன்னும் 500 மீட்டர் நீளமான பகுதி விடுவிக்கப்படாமல் இருக்கிறது. இவ்வாறு விடுவிப்பதன் மூலம் பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்கள் பலாலி வீதியை அடைய இலகுவாக இருக்கும். காங்கேசன்துறையில் இருந்து கீரிமலைக்கு செல்கின்ற பருத்தித்துறை – பொன்னாலை வீதியினுடைய
குறிப்பிட்ட பிரதேசம் இன்னமும் விடுவிக்கப்படாமல் கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பாதையாக இருக்கிறது. அப்பகுதிகள் சுற்றுலா பகுதியாக உள்ளது. சுற்றுலாத் துறைக்கான பயணங்களை செய்வதற்கான பாதைகள் தடைப்பட்டு இருப்பது எங்கள் பிரதேசத்தின் வருமானம் மட்டுமல்ல இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானமும் பாதிக்கப்படுகிறது.
ஜனாதிபதி வரும்போது இவ்வாறான பாதைகளையும் திறந்து விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். கடந்த முறை ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்போதும் வலிவடக்கின் காணிகள் பாதைகள் விடுவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தாலும் கூட, அது நடைபெறவில்லை. மேலும் வலிகாமம் வடக்கு பகுதியில் 3000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட்டிருந்தாலும், அதனை சுவீகரிப்பதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படாமல் உள்ளது. அந்த வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட வேண்டும் என்றார்.


















