யாழ். போதனா வைத்தியசாலையில் நிறை போதையில் சிகிச்சை பெற வந்தவர், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
இச் சம்பவம் இன்றைய தினம் அதிகாலை இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் அதிகாலை 1.40 மணியளவில் நிறை போதையில் இரத்தக் காயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரை 24ஆம் இலக்க விடுதியில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
அதன்போது, குறித்த நபர் தாதிய உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டதோடு, தூஷண வார்த்தைகளை பேசி விடுதியில் ஏனைய நோயாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டமை தெரியவருகின்றது.
இதுதொடர்பில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விடுதிக்கு விரைந்து குறித்த நபரை கட்டுப்படுத்த முயன்றபோது, தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அச்சுறுத்தினார்.
எனினும் அவரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மடக்கி பிடிக்க முற்பட்டவேளை, ஒரு உத்தியோகஸ்தரின் கைகளில் தாக்குதலை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


















