-சொ.வர்ணன்-
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் உள்ளிட்ட ஜனநாயக வழியிலான போராட்டங்களை ஒடுக்கும் வகையிலேயே பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைபு உருவாக்கப்பட்டுள்ளதாக சிரேஷ;ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் கூறியுள்ளார்.
யாழ்ப்பாண கற்கைகள் நிலையத்தின் ஒழுங்கமைப்பில் தந்தை செல்வா அரங்கில் நேற்றுமுன்திம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், என்.பி.பி அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்தது.
ஆனால், அவர்களின் சிங்கள மொழி மூல தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என ஜே.வி.பியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான லயனல் போபகே அண்மையில் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் தரப்பில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டம் எனவும், அதற்குப் பதிலாக புதிய சட்டம் தேவையில்லை என்ற கருத்தே உள்ளது. மேலும் நிலவுகின்ற தண்டணை சட்டக்கோவை, குற்றவியல் நடைமுறைக் கோவை மற்றும் இதர குற்றவியல் சட்டங்களின் ஏற்பாடுகள், போருக்குப் பின் சமூக நிலைமையை கையாள கூடியது. ஆதற்காக தனியாக பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் தேவையற்றது. சர்வதேசச் சட்டத்தில் இதுவரை பயங்கரவாதமென்ற சொற்தொடருக்கான ஏற்கப்பட்ட வரைவிலக்கணம் இல்லாத நிலையில் புதிய சட்டவரைபில் பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணமானது மிகவும் நெகிழ்வுப் போக்கான நிலையிலே அனைத்தையும், எதையும் உள்வாங்கலாம் என்ற தொனியிலே முன்வைக்கப்பட்டுள்ளது.
ஊரடங் கு உத்தரவுகளைப் பிறப்பித்தல், பொதுமக்கள் ஒன்றுகூடக் கூடாதென்ற அறிவித்தலை வழங்கல், கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தடை விதித்தல் போன்ற அவசரகால தடைச் சட்டத்தின் தற்காலிகக் கட்டளைகளை மேற்கொள்ளும் விடயங்களைக் கூட நிதந்தரச் சட்டமாகக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. அரகலய போராட்டத்தின் பயனாக உருவாகிய அரசாங்கம் மீண்டும் ஒரு அரகலய உருவாகுவதனைத் தடுக்கும் விதமாக இந்தச் சட்ட த்தினை உருவாக்குவதாகவும், தமிழ் மக்களினுடைய அரசியற் போராட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கொண்டிருக்கிறது.
ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபவர்களை அச்சுறுத்தும் பாணியிலான சட்ட ஏற்பாடுகளைக் கொண்டதாக முன்மொழியப்பட்ட சட்டவரைபு காணப்படுகிறது. குறித்த சட்டவரைபை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்கவேண்டும். எமது எதிர்ப்புக்களை பதிவு செய்வதோடு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டத்தை எதிர்ப்பதற்கு முழுமையான பங்களிப்பினை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















