-கஜிந்தன்-
உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்துவரும் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து, குறித்த சுற்றுலாத்தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை செயலுருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
வேலணை பிரதேசசபையின் மாதாந்த அமர்வு நேற்று தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது குறித்த ‘எக்கோ ரூறிசம்’ குறித்து பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
வேலணையில் அபிவிருத்தியையும், சுற்றுலா வலயமாக்கலை ஊக்குவிக்கும் வகையிலும், சுற்றுலாவிகளுக்காக சுமார் 77 மில்லியன் ரூபா செலவில் சுற்றுலா அமைச்ச்சினால் 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே மண்டைதீவு சுற்றுலாத்தளமாகும்.
ஆனால், அதன் முறையற்ற பொறிமுறையாலும் சரியான பராமரிப்பின்மையாலும் சபைக்கான வருமானம் இழக்கப்பட்டுள்ளதுடன் எதிர்பார்த்த இலக்கை எட்டாது திட்டமும் முழுமையாகத் தோற்றுவிட்டது.
கொள்வனவு செய்யப்பட்ட படகுகள், இயந்திர உபகரணங்கள் அனைத்தும் உரிய பராமரிப்பின்றி முழுமையாக சேதமாகிக் கிடக்கின்றது. பல உபகரணங்கள் சூறையாடப்பட்டுள்ளதுடன் அது இன்று மது அருந்தும் திடலாகவும் சமூக சீரழிவுக்கான களமாகவும் உருவாக்கப்பட்டு வருகின்றது.
இதனால் எமது பிரதேசத்தின் மாண்பு பாதிக்கப்படுவதுடன், பிரதேசத்தின் நற்பெயருக்கும் இழுக்கு ஏற்படுகின்றது. இவ்வாறு உருவாகிவரும் இந்த நிலையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கான தார்மீக பொறுப்பு வேலணை பிரதேச சபைக்கே இருக்கின்றது.
எனவே, சமூக சீரழிவை நோக்கி நகரும் மண்டைதீவு சுற்றுலாத் தளத்தை தற்போது வர்த்தக நோக்குடன் பராமரித்து முன்னெடுக்கும் தனியாரிடமும் இவ்விடையம் குறித்து விசரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதுடன் இழந்த வருமானத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


















