-சட்டத்தரணி கலாநிதி குருபரன்-
-கஜிந்தன்-
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலீடாக வேறெந்தச் சட்டமும் தேவையற்றது என்பதே தமிழர் தரப்பின் நிலைப்பாடு. தற்போது நிலவுகின்ற தண்டனைச் சட்டக்கோவை, குற்றவியல் நடைமுறைக் கோவை மற்றும் இதர குற்றவியல் சட்டங்களின் ஏற்பாடுகளில் போருக்குப் பின்னரான சமூக நிலைமை கையாளப்படக் கூடியது. அதற்கென தனித்து பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் தேவையில்லை.
இவ்வாறு சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் தெரிவித்தார்.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் ஒருங்கிணைப்பில் நேற்று முன்தினம் யாழ்.நகரில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. அக்கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்திருந்தது. நீக்குகின்ற விடயம் என்.பி.பியின் சிங்கள மொழி மூல தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்னும் விடயத்தை ஜே.வி.பியின் ஆரம்பகால உறுப்பினர் லயனல் போபகேயின் அண்மைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டத்தில் இதுவரை ஏற்கப்பட்ட பயங்கரவாதமென்ற சொற்தொடருக்கான வரைவிலக்கணம் இல்லை. குறித்த சட்டத்திலே பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம் மிகவும் நெகிழ்வுப் போக்கான நிலையிலே அனைத்தையும், எதையும் உள்வாங்கலாம் என்ற தொனியில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்தல், பொதுமக்கள் ஒன்றுகூடக் கூடாதென்ற அறிவித்தலை வழங்கல், கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தடை விதித்தல் போன்ற அவசரகால தடைச் சட்டத்தின் தற்காலிகக் கட்டளைகளை மேற்கொள்ளும் விடயங்களைக் கூட நிரந்தர் சட்டமாகக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.


















